நரை முடி

எனக்கு ரொம்ப வருசமாவே வெள்ளை முடி இருக்கு. ஆனா இப்போ கொஞ்ச நாளா, அது காது பக்கத்துலலாம் வெளில தெரிற மாதிரி ஆகிடுச்சு. வயசான-னால.

ஒரு நாள் சபரிகிட்ட போய், “எனக்குப் பாரேன் வெள்ளை முடி நெறையா வந்துடுச்சு. இங்கலாம் எப்படித் தெரியுது பாரேன்”னு சோகமா காமிச்சிட்டு இருந்தேன்.

அதுக்கு சபரி, “எனக்கும் இங்க இருக்கு பாரு”ன்னு அவன் காது பக்கத்துல இருந்த வெள்ளை முடியைக் காமிச்சான்.

“வெளில தெரியிற மாதிரி வந்துடுச்சுல. அதனால எனக்கு இப்போ கொஞ்ச நாளா கவலையா இருக்கு”ன்னு நான் சொன்னேன்.

“கவலையா?! நான் எனக்கு வெள்ளை முடி வந்ததும், நமக்கும் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹேர்ஸ்டைல் வந்துடுச்சுன்னு சந்தோசம் தான் பட்டேன்.”

“ஓ!!! அஜித் அப்படி ஹேர்ஸ்டைல் வச்சனாலயா! ச்ச.. உங்கள மாதிரி எங்களுக்கும் எதாவது ஒரு ஹீரோயின் இப்படி ‘சால்ட் அண்ட் பெப்பர்’ ஹேர்ஸ்டைல் வச்சிட்டு வந்துருந்தா, நாங்களும் இதைப் பாத்து சந்தோசம் தான் பட்டுருப்போம்ல.. செம்ம..” – இப்படிச் சொல்லிட்டு, அப்புறம் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு சபரி சொன்ன அந்த டயலாகையே மண்டைல யோசிச்சிட்டு இருந்தேன்.

அப்போ ஒரு நாள், என் பையனோட ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு லேடி ஒருத்தங்க, ரொம்ப boldஆ casualஆ அவங்க பிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தாங்க. அவங்க முடியைப் பாத்தா ஃபுல்லா ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தான்.  ‘வாவ். சூப்பரா இருக்கே இவங்க முடி’ன்னு எனக்கு அப்போ தோணிச்சு. ஒருவேள அவங்க பேசுன விதத்தைப் பாத்து எனக்கு அப்படித் தோணிருக்கலாம். ஆனா நல்லா இருந்தது அவங்களோட நரை முடி.

அதுக்கப்புறம் எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். ‘படத்துல நடிக்குற எந்த ஹீரோயினும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் வச்சிட்டு வரப் போறது இல்ல. நம்மளே சபரி மாதிரி, நமக்கும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் வந்துடுச்சு – ஜாலின்னு நெனச்சிக்க வேண்டியது தான்.

‘இதுக்குலாம் கவலைப்பட்டுட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. ஸ்கூலுக்கு முன்னாடி பாத்த அந்த லேடிக்கு இருந்த மாதிரி, நமக்கும் இது அழகா தான் இருக்குன்னு நெனச்சிக்கணும்.’

🎶 நரை கூட ஓர் அழகு 🎶

– க. சுபா –

Leave a comment